பிளாஸ்டிக்கிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறை கண்டுபிடித்து கோவை மாணவி அசத்தல்


பிளாஸ்டிக் இல்லாமல் தினசரி வாழ்க்கையை நகர்த்த முடியாது என்ற அளவிற்கு, மனிதர் வாழ்வில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதில், 70 சதவிகித பிளாஸ்டிக்குகள் கழிவுகளாக வீசப்படுகிறது. சூழல் மாசுபாட்டுக்கு முக்கிய காரணமான இந்த பிளாஸ்டிக்குகளை பாதுகாப்பாக அழிப்பதற்கான ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடந்து வருகிறது.
இந்நிலையில் பிளாஸ்டிக், கண்ணாடி, மெட்டல் போன்ற மக்கா குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பிளாஸ்மா வெப்ப எரிவாயு கலனை, கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின், உயிர் எரிசக்தி துறை ஆராய்ச்சி மாணவியான கீதாஞ்சலி உருவாக்கியுள்ளார்.
இதுகுறித்து கீதாஞ்சலி கூறியதாவது: “அதிகரிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால், திடக்கழிவு மேலாண்மை என்பது மிகவும் சவாலாக உள்ளது. இதற்கு தீர்வாக, மக்கா குப்பைகளை முழுவதுமாக அழித்து எரிசக்தி தயாரிக்கும் விதமாக பிளாஸ்மா வெப்ப எரிவாயு கலனை உருவாக்கியுள்ளேன்.
இதில், பிளாஸ்மா டார்ச் மூலம் 6,000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில், கழிவுகளில் உள்ள கார்பன் மூலப்பொருட்கள் சிதவடைந்து கார்பன்மோனாக்ஸைடு, ஹைட்ரஜன், மீத்தேன் போன்ற தீப்பற்றக்கூடிய வாயுக்கள் உருவாக்கப்படுகிறது. இதிலிருந்து வெப்பம் மற்றும் மின்சாரம் தயாரிக்கலாம். பிளாஸ்மா வெப்ப எரிவாயுக்கலனின் மூலம் அனைத்து வகையான கழிவுகளையும் அழித்து மின்சாரம் மற்றும் வெப்ப ஆற்றல் தயாரிக்க முடியும்.
இந்த செயல்முறையில் கிடைக்கும் ‘ஸ்லாக்ஸ்’ எனப்படும் கழிவுகளை சாலை அமைப்பதில் பயன்படுத்திக்கொள்ளலாம். பிளாஸ்மா வாயு நிலை வெப்ப எரிவாயு கலனில் ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க ஒரு நிமிடத்திற்கு 10 கிலோ உயிர் எரிபொருட்கள் மட்டுமே தேவைப்படுகிறது”. இவ்வாறு கீதாஞ்சலி கூறினார்.